தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை இருக்கும் வரை விடுதலைப் பயணம் தொடரும்


தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை இருக்கும் வரை எங்களுடைய விடுதலைக்கான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும். தேவை எப்போது நிறைவேற்றப்படுகின்றதோ அன்று விடுதலைக்கான எங்களது பயணம் நிறைவடையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் இராஜதந்திர ரீதியாகச் செயற்பட்டதை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலையை அடையும் எங்களின் பயணம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. இப் பயணத்தில் முட்கள் வரலாம், கற்கள் வரலாம், மேடு பள்ளம் வரலாம், ஆனால் நாங்கள் விடுதலை என்ற இலக்கை அடையும் வரை எங்களுடைய விடுதலைப் பயணத்தை தொடர்ந்துகொண்டேயிருப்போம். அதற்காகத்தான் தமிழ்மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர்.

2009 முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு பின்னர் அரசாங்கம் நினைத்திருந்தது வடகிழக்கிற்கு இனிமேல் எந்தவொரு தலைமையும் தனித்துவமாக உருவாகாது அப்படிஉருவாகவும் விடக்கூடாது என்று அதற்காக கடைசியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திட்டமிட்டு பல யுத்திகளை கையாண்டிருந்தது.

குறிப்பாக அந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 37அரசியல் கட்சிகள் போட்டியிட்டு இருந்தன இங்கு 75 வீதமானவர்கள் தமிழர்கள் 25 வீதமானவர்கள் முஸ்லீம் மக்கள் உண்மையில் இலங்கையில் உள்ள விகிதாசாரத் தேர்தல் பற்றி எவரும் சரியாகப் புரிந்திருக்கவில்லை.

முதலில் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். கட்சி வெற்றிபெற்றால்தான் அதில் உள்ள உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரமுடியும். இதைப் பலர் புரிந்துகொள்ளாமல் எல்லோரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாம் என்று நினைத்து பலரும் பலதமிழ் கட்சிகளில் போட்டியிட்டிருந்தனர். அவ்வாறு போட்டியிட்டவர்களுக்கு அரசாங்கமும் உதவியதுடன் அவர்களது உற்றார் உறவினர்களும் அவர்களுக்கு வாக்களித்திருந்தனர்.

ஆனால் அன்று 3600 வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு குறைந்திருந்தால் தமிழர்களின் தலைவிதி தலைகீழாக மாறியிருக்கும். ஏனென்றால் 75 வீதமான தமிழர்களில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் 25 வீதமான முஸ்ஸீம்களில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருப்பார்கள்.

மேற்படி துரோகத்தை செய்தவர்களாக தமிழ் மக்கள் ஆளாகியிருப்பார்கள் என்பதோடு அதற்கான பொறுப்பை போட்டியிட்ட ஏனைய கட்சிகளும் ஏற்றிருக்கவேண்டும். ஆனால் அந்த நிலைமையை மாற்றிய பெருமை உங்களைப் போன்ற தமிழ் மக்களுக்குத்தான் உண்டு.

கடந்த 62 வருடங்களாக நடைபெற்ற அகிம்சை, ஆயுதப் போராட்டங்கள் எங்களுக்கு பின்னடைவைத் தந்திருந்தாலும் கூட இன்று எங்களது போராட்டம் சர்வதேச ரீதியாக சென்றிருக்கின்றது. அதை நாங்கள் இராஜதந்திர ரீதியாக வென்றெடுப்பதற்கான யுத்தியாகத்தான் ஜெனிவாத் தீர்மானம் அமைந்திருந்தது.

எவ்வாறு உலகத்தில் உள்ள 197 நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை ஜனாதிபதியை சந்திக்கின்றார்களோ அவ்வாறு இன்று தமிழினத்தின் தலைமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவையும் சந்திக்கின்றனர்.

எனவே இலங்கை ஜனாதிபதிக்கு நிகராக தமிழர்களின் தலைமையை சர்வதேசம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த பெருமை வெறுமனே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த பெருமையல்ல. இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் கிடைத்த பெருமை. ஆனால் இதை புரிந்துகொள்ளாத சில கட்சிகளும், பச்சோந்திகளும், ஊடகங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது தமிழர்களை தமிழர்களே அழிப்பதற்கு சமனானதாகும்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்ல விடயங்களைச் செய்தால் அதை எழுதவதற்கோ அல்லது அதைப்பற்றி பேசுவதற்கோ யாரும் இல்லை. ஆனால் எமது தலைவர் சம்பந்தன் ஐயா தும்மினால் கூட பிழை பிடிக்கின்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இருமினால் கூட பிழை பிடிக்கின்றனர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முதுகை சொறிந்தால் கூட பிழைபிடிக்கின்றனர்.

அத்துடன் இவ்வாறான பிழைகளை ஒளிபரப்புவதற்கும், கட்டுரை எழுதுவதற்கும் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இருக்கின்றது. ஆனால் தமிழ் தேசியத்தை வளர்த்தெடுப்பதற்கு எவரும் முன்வந்ததாக தெரியவில்லை. இவ்வாறான சூழலில்தான் இன்று தமிழர்களுக்கான விடுதலைப் பயணத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது என்பதை தமிழர்களாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இந்த ஜெனிவாத் தீர்மானம் ஊடாக தமிழர்கள் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் வடகிழக்கில் உள்ள தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயற்படுவதுடன் தமிழர்களின் பேரம் பேசும் சக்தியாக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி அதனூடாக சர்வதேசத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தும்பங்கேணி, வெள்ளிமலை பிள்ளையார் ஆலய பரிபாலனசபை உறுப்பினர் கே.குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை அதிபர் கந்தசாமி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,  சீ.யோகேஸ்வரன், பொன். செல்வராசா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்:

  1. எல்லா நாம்பனும் ஓடுகிறது என்று வயிற்று நாம்பனும் ஓடிய கதைதான்
  2. இலங்கையில் ஜனநாயகக் கட்சியென்று சொல்லும் தகுதி கூட்டமைப்புக்கு மட்டும்தான் உண்டு
  3. கூட்டமைப்பின் செயற்பாடுகளே சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானமாக உருவெடுத்துள்ளது
  4. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் முடிவே குழப்பத்திற்கு மூல காரணம்
  5. ‘எங்கட சம்பந்தன் தெளிவாக உள்ளார்’

Comments are closed.