சிரிய நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுமென பான் கி மூன் நம்பிக்கை


சிரியாவில் இப்போதுள்ள நிலைமையை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை; அதேநேரத்தில், முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார்.

ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

“300 பேர் கொண்ட வலுவான ஐ.நா. பார்வையாளர் குழுவுக்கு பாதுகாப்புச் சபை ஒப்புதல் வழங்க வேண்டும். பார்வையாளர் குழுவை அனுப்புவதற்கு முன் உள்நாட்டில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

சர்வதேச தூதராக கொஃபி அன்னான் அறிவிக்கப்பட்ட பிறகும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவை முழுமையாக ஓய்ந்தபாடில்லை.

அதேநேரத்தில் சிரிய அரசும் போராட்டக்காரர்களும் போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐ.நா. பார்வையாளர் குழுவுடன் ஒத்துழைக்க இரு தரப்பும் தயாராக உள்ளன.

எனினும், சிரியாவில் உள்ள நிலைமையின் தீவிரம் என்னை கவலையுறச் செய்கிறது. இங்கு நம் முன்னுள்ள சவால்களை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை.

அதேநேரத்தில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் நிச்சயம் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிரியாவை மீள்கட்டுமானம் செய்யவேண்டும்.

ராணுவத்தை திரும்பப் பெறுவதற்கான கொஃபி அன்னானின் 6 அம்சத் திட்டங்களை சிரிய அரசு முழுமையாக அமுல்படுத்தவில்லை” என்றார் பான் கீ மூன்.

தொடர்புடைய செய்திகள்:

  1. “இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்” ஜான் ஹோம்ஸ்
  2. ஜயலத் ஜயவர்தனவின் உடல் நிலையில் முன்னேற்றம்
  3. சிரியா: உலக அதிகாரச் சமநிலையில் மாற்றம்
  4. சிரியாவில் இதுவரை 8.500 பேர் பலி

Comments are closed.