ஆணியால் கவிழ்ந்தது டைட்டானிக்
இங்கிலாந்தின் சவுத் ஹம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கி 1912 ஆம் ஆண்டு ஏப்ரலில் சென்ற ‘ஆர்.எம்.எஸ். டைட்டானிக்’ கப்பல் வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள், ஊழியர்கள் என 2,200 இற்கும் அதிகமானோர் சென்ற கப்பலில் அவசரகால படகு குறைவாக இருந்ததால், 710 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. 1500 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி பலியாயினர்.
வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த இந்த சோக சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி டைட்டானிக் விபத்து தொடர்பான பல தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கார்பீல்டு கூறியிருப்பதாவது:
உலோகவியல் (மெட்டாலர்ஜி) துறையில் அதிக அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்கள் டிம் போக், ஜெனிபர் ஹூப்பர் மெக்கர்ட்டி ஆகியோர் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை ஆராய்ச்சி செய்தனர். அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லண்ட் உல்ஃப் தளத்தில்தான் டைட்டானிக் கப்பல் 1909-11 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அங்கு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கப்பலின் அடிப்பகுதியை கோர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘ரிவிட்’ (ஆணி) தரமானதாக இல்லை என்று தெரியவந்திருக்கிறது. அந்த ரிவிட்கள் சரியாக வார்க்கப்படவில்லை.
அவற்றை ஒழுங்கின்றி அடித்து கப்பலை கோர்த்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்த பகுதி பனிப் பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது. செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற ஆணிகள், பொருட்களை பயன்படுத்தியதே படுபயங்கர விபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிட்டது. ஆக, எப்படி தயாரித்தால் கப்பல் உறுதியாக இருக்கும் என்ற கணக்கில் கோட்டை விட்டிருக்கின்றனர்.
அடுத்ததாக, வெப்ப மாற்றம். 1912 இல் கரீபியன் கடல் பகுதியில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் காணப்பட்டது. இதனால், கடலுக்குள் நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்திருக்கிறது. லேப்ரடார் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட பனிப் பாறைகள் திரண்டு தடையை ஏற்படுத்தியிருக்கின்றன. லேப்ரடார் நீரோட்டமும் வடக்கு அட்லான்டிக் வளைகுடா நீரோட்டமும் இணைகிற இடத்தில் பனிப் பாறையில் மோதி டைட்டானிக் விபத்துக்குள்ளானது. கடலில் ஏற்பட்டிருந்த இயற்பியல் மாற்றங்களும் துரதிர்ஷ்டவசமாக கப்பல் விபத்துக்கு காரணமாகிவிட்டது. இவ்வாறு ரிச்சர்ட் கூறியுள்ளார்.
3டி’யில் மாறிய நட்சத்திரம்
உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 இல் வெளியான படம் ‘டைட்டானிக்’. கப்பல் விபத்தை சித்தரித்து பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். உலகம் முழுவதும் மாபெரும் வசூலைக் குவித்து சாதனை படைத்தது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டைட்டானிக் (1997) படம் வெளிவந்த பிறகு, நீல் டிகிராஸ் டைசன் என்ற வானியல் நிபுணர் ஒருவர் கேமரூனுக்கு ஒரு இமெயில் அனுப்பியிருந்தார்.
‘படத்தின் நாயகி கேத் வின்ஸ்லெட் வானில் இருக்கும் நட்சத்திரங்களை ரசிப்பது போல ஒரு காட்சி அமைத்திருக்கிறீர்கள். ஆனால், 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி நட்சத்திரங்கள் அந்த பொசிஷனில் இருக்கவில்லை. எல்லாவற்றையும் மிக துல்லியமாக கவனித்து செய்யும் கேமரூன் இந்த சாதாரண தவறைக்கூட செய்திருக்க கூடாது’ என அதில் கூறியிருந்தார். இதை கருத்தில் கொண்டு, சம்பவம் நடந்த போது நட்சத்திரங்கள் எப்படி இருந்ததோ, அச்சு அசலாக அதே போலவே 3டி படத்தில் மாற்றம் செய்திருப்பதாக கேமரூன் கூறியுள்ளார்.
- நன்றி தினகரன்
தொடர்புடைய செய்திகள்:
- பூமியின் மிக ஆழமான கடலில் தனியாக பயணித்து ‘டைடானிக்’ இயக்குனர் சாதனை!
- ருமேனிய ஆட்சி கவிழ்ந்தது
- அமெரிக்காவில் பின்லேடனின் உடல்: வீக்கிலீக்ஸ்
- கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் சட்டசபையில் ஆபாச படம் பார்த்த 2 எம்.எல்.ஏ.க்கள்




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


