மனித உரிமைகள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சர்வதேச மன்னிப்புச் சபை


மனித உரிமைகள் தொடர்பில் உலக நாடுகள் வழங்கிய வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை வருத்தம் வெளியிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான புரட்சி உலகத் தலைவர்களின் உறுதியற்ற வாக்குறுதிகளினால் தோல்வி கண்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகளுக்கு பிராந்தியத்தை சேர்ந்த மற்றும் உலக நாடுகள் ஆதரவளிப்பதாக வார்த்தை அளவில் வாக்குறுதி அளித்ததாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலீல் செட்டி தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலாபம் அல்லது வேறும் தேவைகளுக்காக மனித உரிமை விவகாரங்களில் உலக நாடுகள் நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் இடம்பெற்ற மனித உரிமைப் போராட்டங்களை பல நாடுகள் சந்தர்ப்பவாத அடிப்படையில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா ஆயுதம் விற்பனை செய்யும் நாடுகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களில் அந்த நாடு தலையீடு செய்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக நாடுகள் நியாயத்திற்காக மட்டும் குரல் கொடுக்க முன்வர வேண்டுமெனவும், பக்கச்சார்பான முறையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் முக்கிய நாடுகளான இந்தியா, பிரேஸில் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் பல விடயங்களில் அநாவசியமான மௌனத்தை காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உலகின் 91 நாடுகளில் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாகவும், 101 நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

  1. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்…
  2. மனித உரிமை கவுன்சிலுக்கு பாதிரிமார் கடிதம்
  3. சர்வதேச ரீதியில் புலிகள் பற்றிய மாயை இன்றும் வலுவுடன் உள்ளதாம்
  4. மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன்
  5. ஆணைக்குழு அறிக்கை பிரச்சினைக்கான தீர்வாக அமையவில்லை

Comments are closed.