Dec 13, 2016

சென்னையை தாக்கிய வர்தா புயல் Featured

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால்
தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 30ஆம் திகதி நடா புயல் உருவாகியது.


இந்தப் புயலானது கரையைக் கடப்பதற்கு முன்பே வலுவிழக்கத் தொடங்கி டிசம்பர் 2ஆம் திகதி கரையைக் கடந்தது.

தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 7ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானதால் புயலாக மாறியது. வர்தா என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது
வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூர்-காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புயலின் திசையானது மேற்கு தென்மேற்காக மாறத் தொடங்கியது.
இதன் காரணமாக, புயலானது அதிதீவிர புயலாக மாறி சென்னையை நோக்கி நகரத் தொடங்கியது.

120 தொடக்கம் 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய வர்தா புயல் காரணமாக
சென்னையில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
3,384 மரங்கள் விழுந்ததில் 297 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
3,400 மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன.
30 மின்சார டிரான்ஸ்போர்மர்கள் சேதம் அடைந்தன.
297 வீதிகள் மூடப்பட்டுள்ளன.
52 போக்குவரத்து சமிக்ஞை கம்பங்களும், 78 பஸ் நிறுத்த கூரைகளும் காற்றில் விழுந்தன.


வர்தா புயல் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர்கள்
500 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

வார்தா புயல் மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
296 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
97 மையங்களில் 8,008 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
10,754 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.


வர்தா புயல், சென்னை துறைமுகத்தில் நேற்று திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

string(1) "1"
Top