Dec 23, 2016

அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்னாக்ஸ் செலவு ஒரு கோடி! Featured

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கட்சியின் பெயர் ஆம் ஆத்மி.

சாமான்யர்களின் கட்சி என்றுதான் இதன் பொருள். தன்னை சாமான்ய மக்களின் முதல்வர் என்றும் அவர் அழைத்துக் கொள்வது உண்டு. பாரதிய ஜனதா கட்சியின் சவாலை சமாளித்து டெல்லியில் இரண்டாவது முறையாக ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் பிடித்த போது அனுபவமிக்க சிறந்த நிர்வாகி தலைநகருக்கு கிடைத்ததாக சாதரண மக்கள் கருதினர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்கு மேலாகி விட்டது. இந்த நிலையில் டெல்லி முதல்வரின் செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் விவேக் கார்க் என்பவர் கேட்டிருந்தார். அளிக்கப்பட்ட பதில்கள் அதிர்ச்சி ரகம். டெல்லி முதல்வரும் அவரது சகாக்களின் செலவுகளையும் பார்த்தால் தலை சுற்றுகிறது. உதாரணத்திற்கு ஸ்னாக்ஸ் செலவுக்காக மட்டும் அரவிந்த் கெஜ்ரிவால் டீம் 1.20 கோடி அரசு பணத்தை தாரளமாக செலவழித்துள்ளது.

டெல்லியில் உள்ள பிளாக் ஷிப் வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்து வருகிறார். இந்த வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்க ரூ.28.60 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் விருந்தினர்களுக்கு டீ, ஸ்னாக்ஸ் வழங்க ரூ.27.25 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் முதல்வரின் டீ, ஸ்னாக்ஸ் ரூ.55.85 லட்சம் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியின் இரண்டாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். அதுமுதல் ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு வரைக்கான செலவுதான் இது. டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டீ ஸ்னாக்ஸ் செலவாக ரூ.15 லட்சம் செலவு செய்துள்ளார். இப்படி டெல்லி அமைச்சர்களின் டீ,ஸ்னாக்ஸ் செலவு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

டெல்லி முதல்வர் பங்களாவின் மின்சாரச் செலவு எவ்வளவு தெரியுமா?. அதாவது கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதியில் இருந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வரை ரூ.2.23 லட்சம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில அமைச்சர்களிலேயே அதிக மின்சாரம் செலவழிக்கும் அமைச்சர்... அந்தமாநில மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்தான். இவரது வீட்டு மின்சார செலவு ரூ. 3.99 லட்சம்.

தண்ணீர் மற்றும் அலுவலகரீதியிலான செலவில் கெஜ்ரிவாலை மிஞ்சி நிற்கிறார் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. கடந்த 2015 மார்ச் 18-ம் தேதி முதல் 2016 அக்டோபர் மாதம் வரை தண்ணீருக்காக கெஜ்ரிவால் ரூ.13, 920 செலவு செய்திருக்கிறார். துணை முதல்வர் சிஷோடியாவின் தண்ணீர் செலவு 1.63 லட்சம் ஆகும். மின்வாரியத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தண்ணீருக்காக ரூ. 6, 177 செலவழித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கடந்த 2015 பிப்ரவரி முதல் 2016 அக்டோபர் மாதம் வரையிலான பெட்ரோல் செலவு 5.08 லட்சம் ஆகும்.

மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசுக் கூட வீணடிக்கமாட்டேன். மின் கட்டணத்தை குறைப்பேன். மின்சாரத்தை மிச்சப்படுத்துவேன். ஊழலை அப்புறப்படுத்துவேன் என்று வாக்குறுதிகள் அளித்து டெல்லி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இப்போது ஆர்டிஐ வழியாக ஸ்னாக்ஸ் செலவுக்காக ஒரு கோடி ரூபாய மக்கள் பணத்தை செலவழித்துள்ளார்.

 

நன்றி - விகடன்

string(1) "1"
Top